தமிழ்நாடு, 28 ஜூன் (பெர்னாமா) -- இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
அதில், தமிழகத்தில் மட்டும் 52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து மூலம், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் போலியோ நோய் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு வருகிறது.
இனி வரும் காலங்களில், போலியோ குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த இலவச சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், 2026 போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை தொடங்கி வைத்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனை சாவடிகள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]