உட்சுனோமியா, 08 ஜூன் (பெர்னாமா) -- ஜப்பானின் உட்சுனோமியா நகரில் முதன்முறையாக கரடி காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரில் இயங்கிவரும் 94 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளும் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோக்கியோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஐந்து லட்சம் பேர் வசிக்கும் அந்நகரில், சனிக்கிழமை மாலையில் ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் கரடி முதன்முதலில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அந்நகரின் முக்கிய வணிக வீதிகளில் ஒன்றில் உள்ள மறைக்காணியில் அதிர்ச்சிக்குள்ளான இரண்டு வழிப்போக்கர்களைக் கடந்து கரடி ஒன்று ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலையில் ஓர் இடைநிலைப் பள்ளியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இறுதியாகக் காணப்பட்ட அந்தக் கரடி இன்னும் பிடிபடாமல் உள்ளது.
ஜப்பானில், நகர்ப்புறங்கள் உட்பட பல இடங்களில் கரடித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இவ்வாண்டு அரசாங்கம் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
கடந்த வாரம், வடகிழக்கு நகரமான ஃபுக்குஷிமாவில் கரடி தாக்கப்பட்டதில் குறைந்தது நால்வர் காயமடைந்தனர்.
அக்கரடியைப் பிடிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)