கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன.
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப உருவாகும் புதிய திறன்கள், உயர்கல்வி வாய்ப்புகள், தொழில்முனைவோர் திட்டங்கள் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவை இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படை தேவைகளாக உள்ளன.
இந்நிலையில், இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் முதன்மை அரசாங்க அமைப்பாக மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு, மித்ரா திகழ்கிறது.
கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், இளைஞர் முன்னேற்றம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பையும் வாய்ப்புகளையும் விரிவுப்படுத்தும் நோக்கில் மித்ரா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, அதன் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் கூறினார்.
அதோடு, மித்ரா என்பது உதவித்தொகை அல்லது மானியம் வழங்கும் அமைப்பு என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் நிலவினாலும், சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவி உள்ளிட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களிலும் அது முக்கிய கவனம் செலுத்துவதாக, அவர் விவரித்தார்.
''மித்ரா என்றாலே பொதுவாக அனைவருக்கும் உள்ள கருத்து என்னவென்றால் பணம் கொடுப்பதுதான் இவர்களின் பணி. ஆனால், நாங்கள் அதற்கு மட்டுமே முக்கியம் வழங்கவில்லை. நாங்கள் அதன் திட்டத்திலும் கவனம் செலுத்துகின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள். நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறோம். பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களுக்குப் பல செலவுகள் இருக்கும் காரணத்தில் நாங்கள் அவர்களுக்கு அதனை வழங்குகிறோம்'', என்று அவர் கூறினார்.
பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமின்றி பள்ளி படிப்பை விட்டு பாதியிலேயே விலகும் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பயிற்சி திட்டங்களை மித்ரா செயல்படுத்தி வருவதாக, அவர் கூறினார்.
குறிப்பாக, தற்போது அரசாங்கம் அதிகம் வலியுறுத்தி வரும் திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் தேவையான நிதியுதவிகளையும் மித்ரா வழங்க தயாராக இருப்பதாக ரவீந்திரன் தெரிவித்தார்.
''அரசாங்கத்தின் கீழ் நிறைய பயிற்சி நிறுவனங்கள், குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. ஆக, எதிர்காலத்தில் நாம் அது குறித்து அதிகம் விளம்பரப்படுத்தலாம். அதை சமுதாயத்திற்குக் கொண்டு சேர்க்கலாம். ஆக, மாணவர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அரசாங்கத்தின் பயிற்சி நிறுவனங்களில் உள்ளது. ஆனால், அதில் ஒரு குறிப்பாக தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை இருந்தால் மித்ரா அதற்கு உதவும்'', என்றார் அவர்.
இதனிடையே, குறு, சிறு மற்றும் நடுத்தர இந்திய தொழில்முனைவோருக்கு மித்ரா ஆதரவு வழங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
''மித்ராவை மட்டுமே எதிர்பார்க்காமல், அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் உதவிகள் வழங்க தயாராக இருக்கின்றனர். ஆக, மித்ராவை மட்டும் அவர்கள் நம்பியிருந்தால் மிகவும் குறிப்பிட்ட சில உதவிகள்தான் கிடைக்கும். உதராணமாக, தெக்குன், ஸ்பூமி, SME Corp திட்டங்கள் போன்றவற்றில் விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு நிச்சயம் உதவிகள் வழங்கப்படும்'', என்று அவர் கூறினார்.
அண்மையில், பெர்னாமாவின் பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு மணி 7.30-க்கு பார்வை நிகழ்ச்சி ஒளியேறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)