Ad Banner
Ad Banner
 பொது

பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த பாஸ்; எதிர்பார்க்கப்பட்ட முடிவே

09/06/2026 04:24 PM

புத்ராஜெயா, 09 ஜூன் (பெர்னாமா) -- பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாஸ் கட்சியின் முடிவு, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

எந்தவொரு ஒத்துழைப்பும் அரசியல் கண்ணோட்டங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்ற பாடத்தை இம்முடிவு கற்பித்துள்ளதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

''இது நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். நாங்கள் இறைவனின் சட்டத்தை முந்திக்கொள்ளவில்லை. ஆனால், இது அரசியல் கண்ணோட்டத்தில் ஒரு சவாலாகும். ஏனெனில், எந்தவொரு ஒத்துழைப்பும் நேர்மையால் சூழப்பட்டிருக்க வேண்டும், மேலும் அதில் துரோகத்தின் கூறு எதுவும் இருக்கக்கூடாது,'' என்றார் அவர்.

துணைப் பிரதமரும், புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டாக்டர் அஹ்மாட் சாஹிட், இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற கெமாஸ் கல்வியாளர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதனிடையே, ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற அம்னோ மற்றும் பாஸ் கட்சி இடையிலான கூட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், அது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும், அதைத் தொடர்ந்து மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார்.

முன்னதாக பெர்சத்து கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை முறித்துக்கொள்வதாக பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மத்திய செயற்குழு சிறப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்திருந்தார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் தற்போதைய மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பெர்சத்து கட்சிக்குள் நிலவும் நெருக்கடி மற்றும் உட்பூசல்கள் பெரிக்காத்தான் நேஷனலைப் பாதிக்கும் வகையில் இருப்பதைத் தமது கட்சி தீவிரமாகக் கவனித்து வருவதாக பாஸ் கட்சியின் பாசிர் பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நிக் முஹமட் சவாவி சாலே அண்மையில் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)