கோலாலம்பூர், 09 ஜுன் (பெர்னாமா) -- வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வர்த்தகர்களுக்கு இடையில் நிலவும் போட்டியை ஆராய்வதற்காக, நிதி அமைச்சின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை அரசாங்கம் அமைக்கவிருப்பதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
இவ்விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, குஸ்கோப் உட்பட பல்வேறு அமைச்சுகளின் ஒத்துழைப்பு உள்ளடக்கி இருப்பதாக அவர் கூறினார்.
''எங்களைப் பொறுத்தவரைப் பொருளாதார அமைச்சின் கோணத்தில் என்னவென்றால், வணிகம் செய்வதற்கான எளிமை என்ற அம்சத்தைக் கருத்தில் கொள்வது மட்டுமல்லாமல், மேற்கொள்ளப்படும் வணிகமும் நியாயமானதாகவும், உள்ளூர் வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்க வேண்டும்,'' என்றார் அக்மல் நஸ்ருல்லா.
பொருளாதார வளர்ச்சிக்கு வணிகத்திற்கான வசதிகள் முக்கியம் என்றாலும், வணிக நடவடிக்கைகள் நியாயமாக நடத்தப்படுவதையும், உள்ளூர் வர்த்தகர்களைப் பாதிக்கும் போட்டியை உருவாக்காமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
போட்டி தொடர்பான பிரச்சினைகள், பயனீட்டாளர்களின் நலன், சிறு வணிகர்கள் மற்றும் நாட்டின் வணிகச் சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதால், அவற்றை முழுமையாக ஆராய வேண்டியது அவசியம் என்று அக்மல் நஸ்ருல்லா குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)