Ad Banner
Ad Banner
 பொது

29 லட்சம் ரிங்கிட் போதைப் பொருளை கைப்பற்றியது சபா சுங்கத் துறை

09/06/2026 04:41 PM

கோத்தா கினாபாலு, 09 ஜூன் (பெர்னாமா) --  சபா, தாவாவ்வில் கடந்த மே 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 29 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான COCAINE மற்றும் கஞ்சா வகை போதைப் பொருளை அரச மலேசிய சுங்கத் துறை கைப்பற்றியது.

காலை மணி 11.45-க்கு பொருள் அனுப்பும் சேவை வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனை நடவடிக்கையில், சந்தேகத்திற்குரிய இரு பெட்டிகளைத் தமது தரப்பு அடையாளம் கண்டதாக, அம்மாநில சுங்கத் துறை இயக்குநர் டாக்டர் அஹ்மாட் தௌஃபிக் சுலைமான் தெரிவித்தார்.

''முதல் பெட்டியை சோதனை செய்ததில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளைக் கட்டிகள் கொண்ட 10 வெள்ளை நிற நெகிழிப் பைகள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாவது பெட்டியை சோதனை செய்ததில் கஞ்சா என சந்தேகிக்கப்படும், அடைக்கப்பட்ட உலர்ந்த பூக்கள் கொண்ட 10 ஆரஞ்சு நிற அலுமினியத் தகடு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன'', என்றார் அவர்.

அதிகாரத் தரப்பிடம் பிடிபடாமல் இருக்கும் நோக்கத்துடன் போதைப் பொருள் என்று சந்தேகிக்கப்படும் தடைச் செய்யப்பட்ட பொருள்களைப் பொருள் அனுப்பும் சேவை வழியாக விநியோகிப்பதே இதில் கையாளப்பட்ட செயல்முறையாகும் என்று டாக்டர் அஹ்மாட் தௌஃபிக் விவரித்தார்.

1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

இதனிடையே, சபா சுங்கத் துறை மேற்கொண்ட மேலும் ஐந்து வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளின் மூலம் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் மற்றும் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)