பத்து பஹாட், 09 ஜூன் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கத் திரும்புவதை எளிதாக்கும் வகையில், நாட்டின் நுழைவாயில்களில் சிறப்புத் தடத்தை அமைப்பதன் அவசியத்தை உள்துறை அமைச்சு ஆராயும்.
சம்பந்தப்பட்ட தேர்தலுக்கான முக்கியத் தேதியை தேர்தல் ஆணையம், S-P-R அறிவித்தப் பின்னர், அவ்விவகாரம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
''உள்துறை அமைச்சில் உள்ள நாங்கள், குறிப்பாக குடிநுழைவுத் துறையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் எஸ்.பி.ஆர் அறிவிப்புக்கு பதிலளிக்கும்,'' என்றார் அவர்.
இன்று, பத்து பஹாட்டில் நடைபெற்ற சித்ரா நெகாரா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு கூறினார்.
வாக்களிப்பு நாள் ஞாயிற்றுக்கிழமையாக நிர்ணயிக்கப்பட்டால், ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாம் வழித்தடத்தில், சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், வாக்களிப்பு நாள் சனிக்கிழமையாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், அத்தினம் சிங்கப்பூரில் மலேசியர்கள் பணிபுரிவார்கள் என்பதால் வேறுபட்ட சூழ்நிலை நிலவலாம் என்று சைஃபுடின் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)