இடுரி, 09 ஜூன் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டா முழுவதும் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றின் உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை 563-ஐ எட்டியுள்ளது.
மேலும் இந்த நோய்ப் பரவலால், 90 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஆப்பிரிக்க சிடிசி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
ஆப்பிரிக்க சிடிசி வெளியிட்ட தகவலின்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் 544 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே வேளையில், உகாண்டாவில் 19 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் வேகமாக பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவகிறது.
இந்நிலையில், எபோலா நோய் பரவல் காரணமாக, காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான தனது எல்லையை மூடும் முடிவை உகாண்டா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரேயெசுஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
''இந்த மாதிரியான பரவலான பயணக் கட்டுப்பாடுகள் தேவையில்லை, அவை நீக்கப்பட வேண்டும். ஏனெனில் சில நாடுகள் அவற்றை ஏற்கனவே நீக்கியுள்ளன. ஆகவே, அவர்கள் (உகாண்டா) மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். மேலும் எபோலா நோய் தொற்றுக்கு நேரடி தொடர்பு தேவை; அது கொவிட் போல அல்ல. எனவே அடிப்படை முன்னெச்சரிக்கைகளுடன், பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்கவோ அல்லது அது ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்படுத்தவோ முடியும்,'' என்றார் அவர்.
நேற்று, உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள எபோலா தனிமைப்படுத்தல் மையத்தை பார்வையிட்ட பின்னர் தெட்ரோஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)