கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், தனித்துப் போட்டியிடப் போவதாக தேசிய முன்னணி அறிவித்திருக்கிறது.
36 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கப் போவதாக நம்பிக்கை கூட்டணி அறிவித்ததை அடுத்து, தேசிய முன்னணி இம்முடிவு எடுத்ததாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
''ஆம், நெகிரி செம்பிலானில் நாங்கள் நிச்சயமாகத் தனித்துப் போட்டியிடுவோம். ஏனெனில், பிஎச் அனைத்து 36 இடங்களிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது, அவர்கள் அனைத்து மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். அதனால், நாங்கள் தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார் அவர்.
இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை, தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 இன்வெஸ்ட் மலேசியா எனும் நிகழ்ச்சி தொக்கி வைத்தப் பின்னர், அஹ்மாட் சாஹிட் செய்தியாளர்களை சந்தித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)