கோலாலம்பூர், 10 ஜூன் (பெர்னாமா) -- இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கும் தமது நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
பல ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் அர்ப்பணிப்பையும், இந்தியாவின் வளர்ச்சி, செழுமை மற்றும் உலக அரங்கில் அதன் செல்வாக்கை முன்னெடுத்துச் சென்ற தலைமைத்துவத்தையும் மோடியின் இச்சாதனை பிரதிபலிப்பதாக அன்வார் பாராட்டினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற வரலாற்றுச் சாதனைப் பதிவையும் மோடி கொண்டிருப்பதாக தமது முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுடனான நீண்டகால நெருங்கிய நட்புறவை மலேசியா மதிப்பதாகவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இருதரப்பும் நல்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வெற்றி பெறவும், இந்திய மக்கள் தொடர்ந்து அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பை அனுபவிக்கவும் தாம் பிரார்த்தித்து கொள்வதாக அன்வார் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)