Ad Banner
Ad Banner
 உலகம்

ஜெர்மனியின் சில பகுதிகளில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை எட்டக்கூடும்

24/06/2026 06:35 PM

ஜெர்மனி, 24 ஜூன் (பெர்னாமா) -- மத்திய ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் பரவலான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், இவ்வார இறுதியில் ஜெர்மனியின் சில பகுதிகளில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை எட்டக்கூடும்.

மேற்கு மற்றும் தென்மேற்கு ஜெர்மனியில், வெப்பநிலை இன்று 38 பாகை செல்சியசை அடையலாம் என்றும், வெள்ளிக்கிழமை சில பகுதிகளில், 41 பாகை செல்சியசாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி, 41.2 பாகை செல்சியஸ், ஜெர்மனியில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை, ஆகும்.

மேலும், 2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி, 39.6 பாகை செல்சியஸ், ஜூன் மாதம் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 24 பாகை செல்சியசுக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடும்.

அமலாக்க அதிகாரிகள் இச்சூழ்நிலையை வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலை என்று விவரித்து வரும் வேளையில் வானிலை எப்போது தணியும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

இதனால், பல பள்ளிகள் மூடப்பட்டதோடு சில இடங்களில் பள்ளி இறுதித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே, லண்டனில் உள்ள Canary Wharf வணிகப் பகுதியில் வெப்பநிலை 35 பாகை செல்சியசை எட்டியதால், மக்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டனர்.

இவ்வாரம் பிரிட்டனில் ஜூன் மாதத்திற்கான மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தையும் வேல்ஸ்சின் சில பகுதிகளையும் தாக்கும் நான்கு நாள்கள் வெப்ப அலையின் ஒரு பகுதியாக, வாரத்தின் மத்தியப் பகுதியில் வெப்பநிலை 39 பாகை செல்சியசை எட்டக்கூடும்.

பிரிட்டனில் ஜூன் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை, 1957 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் 35.6 பாகை செல்சியஸ் ஆகப் பதிவு செய்யப்பட்டது.

அதேவேளையில், அந்நாட்டில் இதுவரை மிக உயர்ந்த வெப்பநிலை 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 40.3 பாகை செல்சியஸ் பதிவானதாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)