Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஈவுட் மற்றும் எல்பில் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

10/06/2026 07:56 PM

சுங்கை சிப்புட், 10 ஜூன் (பெர்னாமா) --  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் உள்ள பேராக், சுங்கை சிப்புட் ஈவுட் மற்றும் எல்பில் தோட்டங்களைச் சேர்ந்த 47 முன்னாள் மற்றும் இன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமை பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக் காணப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து நடைபெற்ற சைம் டார்பி நிறுவன அதிகாரிகள், நில அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட டத்தோ சிவநேசன், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், NUPW சார்பில் தொழிலாளர்களையும் சந்தித்தார்.

சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 40 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைத் திட்டத்திற்காக பேராக் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்க அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக, டத்தோ அ.சிவநேசன் கூறினார்.

எனவே, ஆர்.பி.தி எனப்படும் கிராமப்புற குடியிருப்பு திட்டத்தின் மூலம் சாலை, வடிகால், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, குறைந்த விலையில் அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான பரிந்துரையையும் மாநில அரசாங்கத்திடம் தாம் முன்வைக்கப் போவதாக அவர் கூறினார்.

இதுவரை மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வந்த இந்த வீட்டு மனைத் திட்டம், இனி முழுமையாக மாநில அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின் கீழ் செயல்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே, பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட்டு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தாம் நம்புவதாக தொழிலாளர் சந்திரு செல்வராஜூ கூறினார்.

சம்பந்தப்பட்ட நிலம் முழுமையாக மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், தனியார் மேம்பாட்டாளர்களுடன் இணைந்து வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாநில அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)