தோக்கியோ, 10 ஜூன் (பெர்னாமா) -- மேம்பட்ட தொழில்நுட்பங்களில், குறிப்பாக SEMICONDUCTOR எனப்படும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பொட்டல அமைப்பு முறை ஆகியவற்றில் மலேசியா இன்னும் கூடுதல் திறனை வளர்த்து கொள்ள ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு தொழில்துறையின் ஆதரவு அவசியமானதாக உள்ளது.
பாரம்பரிய வளர்ச்சித் துறைகளை மட்டும் சார்ந்திருக்காமல், இலக்கவியல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு வட்டார மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை மையமாகத் தனது பங்கை வலுப்படுத்திக்கொள்ள மலேசியா வியூகம் வகுத்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறையைப் பொருத்தவரை, நாம் அதிக அதிர்ஷ்டசாலிகள், ஏனென்றால் இப்போது மலேசியா இவ்வட்டாரத்தின் மின்னியல் உபரிப்பாக தயாரிப்பு தொழில்துறை மையமாக ஓரளவிற்கு உருவெடுத்துள்ளது. குறைந்த விலை மட்டுமல்ல, இப்போது உயர் விலைப் பிரிவுகளிலும் கவனம் செலுத்துகிறோம். நாம் பொட்டல மற்றும் மேம்பட்ட பொட்டல அமைப்பு முறை பற்றியும் பேசுகிறோம். இதில்தான் ஜப்பானியத் தொழில்துறைகளுடனான ஒத்துழைப்பும், ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவும் மிகவும் அவசியமானதாகிறது'', என்றார் அவர்.
ஜப்பான் தோக்கியோவில் இன்று நடைபெற்ற Nikkei மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய பின்னர், நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தின் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)