Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மின்-சிகரெட்டுகளுக்கான முழு தடைக்கு பி.டி.ஆர்.எம் நிறைவான ஆதரவு

11/06/2026 06:25 PM

கோலாலம்பூர், ஜூன் 11 (பெர்னாமா) -- PIU PIU எனப்படும் புதிய செயற்கை போதைப்பொருள் மின்-சிகரெட் திரவத்தில் கலக்கப்படுவதாக நம்பப்படுவதைத் தொடர்ந்து, வேப் எனப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை விதிப்பதை அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் ஆதரிக்கிறது.

FENTANYL மற்றும் மனோவியல் வேதிப்பொருட்களின் கலவையைக் கொண்டுள்ள இந்த போதைப்பொருள், ZOMBIE போன்ற ஒரு மாயத்தோற்ற அல்லது மயக்க நிலையை ஏற்படுத்தக்கூடியது என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

போதைப் பொருள் உட்கொள்வதற்காக, குறிப்பாக இளைஞர்களிடையே மின்-சிகரெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கை உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அயோப் கான் தெரிவித்தார்.

"இது ஒரு வணிக வாய்ப்பு என்றும், மின்-சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பூமிபுத்ராக்கள் என்றும் வேறு சில கருத்துக்கள் கூறப்பட்டாலும், இது பூமிபுத்ரா அல்லது பூமிபுத்ரா அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக, மின்-சிகரெட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுடன் மனோவியல் வேதிப்பொருட்கள் (psychoactive substances) கலக்கப்படுவதுமே இங்கு முக்கியப் பிரச்சினையாகும். மேலும், மின்-சிகரெட் பழக்கம் இளைஞர்களிடையே ஒரு பெருமையான விவகாரமாக மாறி வருவதால், இதனை ஆரம்பக்கட்டத்திலேயே நாம் தடுக்க வேண்டும்," என்றார் அவர்.

219-ஆவது காவலர் தினத்தை முன்னிட்டு, இன்று, துங்கு அம்புவான் புசார் துவாங்கு ஐஷா ரொஹானி மருத்துவமனை மற்றும் மலேசிய தேசியப் பல்கலைக்கழக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அயோப் கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

மின்-சிகரெட்டுகளில் உள்ள உண்மையான உள்ளடக்கத்தைப் பற்றி அதிகாரிகளையும் பொதுமக்களையும் திசைதிருப்பி, குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல்கள் போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு வழியாக மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக அயோப் தெரிவித்தார்.

மின்-சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்யும் நடவடிக்கை பி.டி.ஆர்.எம்-இன் முழுமையான அதிகார வரம்பிற்குள் இல்லாமல், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது என்று அவர் மேலும் விளக்கினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)