Ad Banner
Ad Banner
 பொது

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியம்

11/06/2026 07:30 PM

கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா) --  இந்நாட்டில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள தீர்வைக் காண்பதை உறுதி செய்ய, பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பும் விரிவான அணுகுமுறையும் அவசியமாகும் என்று டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து, இப்பிரச்சனை கடல் எல்லைக் கட்டுப்பாடு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஆவணப் பதிவு ஆகிய விவகாரங்களையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் விளக்கினார்.

''மலேசியாவிற்குள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்லது புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதைத் தடுப்பதில், முதற்கட்டப் பாதுகாப்பைக் கடற்படையும், இரண்டாம் கட்டப் பாதுகாப்பை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமும் மற்றும் கடல் பகுதியாக இருந்தால் மூன்றாம் கட்டப் பாதுகாப்பைக் கடல்சார் போலீசாரும் வழங்குகின்றனர். எனது நினைவறிவுக்கு எட்டியவரை, கடலில் 12 அல்லது 20 கடல் மைல் பரப்பளவு கடல்சார் போலீசாரின் கீழ் வருகிறது. அதன் பிறகு அவர்கள் தரையிறங்கும்போது, அவர்களின் ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாகத் தங்குவது போன்ற விவகாரங்கள் குடிநுழைவு துறையின் கீழ் வருகின்றன. போலீசாரைப் பொறுத்தவரை, பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,'' என்று அவர் கூறினார்.

UNHCR எனப்படும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் ஒரு லட்சத்து 28,200 ரோஹிங்கியா அகதிகள் உட்பட மொத்தம் இரண்டு லட்சத்து 19,472 பேர் UNHCR அடையாள அட்டை வைத்துள்ளனர்.

ரோஹிங்கியா அகதிகளில் பெரும்பாலோர் மியான்மரிலிருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டுவதால், இப்பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள முறையில் தீர்வு காண்பதை உறுதி செய்ய, அவர்கள் புறப்பட்டு வந்த அதே நாட்டுடன் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.

அதே வேளையில், ரோஹிங்கியா இனத்தவர் வசிக்கும் பகுதிகள் உட்பட, சட்டவிரோதக் குடியிருப்புகளுக்கு எதிரான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் போலீசாரால் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)