Ad Banner
Ad Banner
 பொது

தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது ஜேகோம் போலீஸ் புகார்

11/06/2026 07:38 PM

கோலாலம்பூர், 11 ஜூன் (பெர்னாமா) --  கடந்த மாதம் முதல் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி, தொடர்பு அமைச்சின் செயல்பாடுகளைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் மீது சமூக தொடர்புத் துறை, ஜேகோம் போலீஸ் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் அளிக்கப்பட்டதாக ஜேகோம் தலைமை இயக்குநர் முஹமட் ஹிஷாமுடின் கசாலி  தெரிவித்தார்.

ஆல்பர்ட் தெய் மற்றும் அவரது குழுவினர் அமைச்சின் வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் நான்கு முறை கூடியதாக அவர் கூறினார்.

''தொடர்பு அமைச்சின் கட்டிடத்தின் முன்பு கூடுவது ஒரு தவறான அறிகுறியாகும். குறிப்பாக, அங்கு பணிபுரியும் அரசாங்க ஊழியர்களுக்கு இது இடையூறு விளைவிக்கிறது. ஏனெனில், ஆயிரக்கணக்கானோர் அந்தக் கதவின் வழியாகக் கட்டிடத்தின் மேலே செல்ல விரும்புகிறார்கள். அங்குப் பல கதவுகள் இருந்தாலும், அதுதான் பிரதான கதவு. எனவே, ஓர் அரசாங்க ஊழியர் பணிக்குச் செல்வதைத் தடுக்கும் குற்றத்திற்காக, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 186-இன் கீழ் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது,'' என்று அவர் தெரிவித்தார்,

அரசாங்க ஊழியரை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தூண்டுதல் நடவடிக்கைகளுக்கான குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 504 மற்றும் 1955-ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 14 கீழும் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

தமது மேற்பார்வையின் கீழ் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமது பொறுப்பாகும் என்று கூறிய முஹமட் ஹிஷாமுடின், இது குறித்து முழு விசாரணை மேற்கொள்ள இதை முழுமையாக போலீசாரிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)