Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

வணிகத் துறையில் வெளிநாட்டவர்கள்; அமலாக்க நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் - மைக்கி

12/06/2026 05:20 PM

கோலாலம்பூர், ஜூன் 12 (பெர்னாமா) -- சுற்றுலா மற்றும் மாணவர்களுக்கான விசாவில் மலேசியாவிற்குள் நுழையும் சில வெளிநாட்டினர் வியாபாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவர்களின் அந்நடவடிக்கைகளினால், உள்ளூர் வர்த்தகர்கள் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அவற்றை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மைக்கி கேட்டுக் கொண்டுள்ளது.

தற்காலிகமாக வியாபாரம் செய்து வந்த வெளிநாட்டினர், வியாபாரத் திறனை வளர்த்துக் கொண்டு தற்போது நிரந்தர வியாபாரிகளாக தங்களது நிலையை மேம்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கொள்முதல் சந்தைகள், சிறு வியாபாரத் தளங்களில் அந்நிய நாட்டினர் முதலாளிகளாகவும் செயல்படும் சூழல்நிலை உருவாகிவிட்டதாக மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மைக்கி துணைத் தலைவர் டத்தோ ஏ.டி. குமரராஜா சுட்டிக் காட்டினார்.

''அனைத்து துறைகளில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைந்து வியாபாரம் செய்கின்றனர். சுகாதார சார்ந்த வியாபாரங்கள் நடத்தக்கூடியதையும் நாம் பார்க்கிறோம்,'' என்றார் அவர்.

மலேசியாவில் உள்நாட்டினர் வியாபாரம் செய்வதற்கு பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆனால், விசாக்களை தவறாக பயன்படுத்தி மலேசியாவில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டினர், வணிகம் செய்து வாழ்க்கை நடத்துவது வருத்தமளிப்பதாக குமரராஜா தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

''உதாரணத்திற்கு, ஒரு பொருளை நான் இறக்குமதி செய்கிறேன் என்றால், அதற்கு வரி செலுத்தியிருப்பேன். வியாபாரம் நடத்துவதற்கு பதிவு செய்திருப்பேன். என்னுடைய வியாபார இடத்தில் பல தொழிலாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான ஈ.பி.எப், சொக்சோ செயல்முறைகளை செய்ய வேண்டும். இவ்வாறு நிறைய கடமைகள் இருக்கின்றன. ஆனால், அந்நிய நாட்டில் இருந்து வந்து, இங்கு வரும் வியாபாரி இவற்றை செய்யவில்லை,'' என்றார் அவர்.

மலேசியாவில் நடத்தப்படும் 12 லட்சம் வியாபாரங்களில் 70 விழுக்காடு குறு வர்த்தகம் ஆகும்.

வெளிநாட்டு வணிகர்களுடன் போட்டியிட முடியாமல், வணிகத் துறையில் அவர்களின் நிலை பலவீனமடையும் சூழலை எதிர்நோக்குகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பிரச்சனையைத் தீர்வுக் காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டதாக குமரராஜா விளக்கினார்.

எனவே, மலேசிய வர்த்தகர்களின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் குமரராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில், நாட்டில் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்தி சில வெளிநாட்டினர், வியாபாரம் செய்து வருவது தொடர்பில் பிரதமர் வருத்தம் தெரிவித்தது குறித்து பெர்னாமா செய்திகளிடம் கருத்துரைத்த குமரராஜா, அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)