குஜராத், 12 ஜூன் (பெர்னாமா) -- ஓராண்டை கடந்தபோதிலும், மேற்கு அகமதாபாத் நகரில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தின் காயங்கள் இன்னும் மறையவில்லை.
தீக்கிரையான தங்கும் விடுதி கட்டிடம், எரிந்த வாகனங்கள், கைவிடப்பட்ட உணவகம் மற்றும் துயரத்தில் வாடும் குடும்பங்கள் ஆகியவை, அவ்விபத்தின் வேதனை நினைவுகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியாவின் Boeing 787 Dreamliner ரக விமானம், கடந்தாண்டு ஜூன் 12-ஆம் தேதி, அஹ்மதாபாத்திலிருந்து லண்டன் கெட்விக் நோக்கிப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
அவ்விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
அக்கோர விபத்து குறித்து விசாரித்து வரும் இந்திய அதிகாரிகள், ஓராண்டு நிறைவுக்கு முன்னதாக இறுதி அறிக்கைக்குப் பதிலாக ஒரு இடைக்கால அறிக்கையைத் தயாரித்து வருகின்றனர்.
இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம், ஏ.ஏ.ஐ.பி-இன் இடைக்கால அறிக்கை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட பூர்வாங்க அறிக்கையை விட மிகவும் விரிவானதாக இருக்கும்.
மேலும், விபத்திற்கான சாத்தியமான முதன்மைக் காரணங்களையும் பிற பங்களிப்புகளும் அதில் ஆராயப்படும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]