புத்ராஜெயா, ஜூன் 12 (பெர்னாமா) -- தளவாட நிர்வகிப்பு மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகிய காரணங்களினாலேயே, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.
மேலும், மிகக் குறுகிய காலத்தில் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது, களத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் தயாரிப்புகளின் தரத்தைப் பாதிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்துள்ளார்.
''நெகிரி செம்பிலான் சட்டமன்றம் திடீரென கலைக்கப்பட்டதால், அங்கு உடனடியாகத் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கவில்லை. நெகிரி செம்பிலானில் தற்போது வாக்குப்பெட்டிகள் மட்டுமே தயாராக உள்ளன. எனவே, அவர்கள் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. முதலில் நாங்கள் ஜோகூர் தேர்தலை முடித்துவிட்டு, பின்னர் எங்கள் குழுவினர் அனைவரையும் ஜோகூரிலிருந்து நெகிரி செம்பிலானுக்கு உதவி செய்ய அழைத்துச் செல்வோம். இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்தினால், அதற்கான தயாரிப்புகளைச் செய்து முடிக்க எங்களுக்குக் கண்டிப்பாக நேரம் போதாது,'' என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று விளக்கமளித்தார்.
இருப்பினும், நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாகத் தேர்தல் ஆணையம், தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு சிக்கலும் எழவில்லை என்றும் ரம்லான் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)