சுலலாங்கோர்ன், 12 ஜூன் (பெர்னாமா) -- தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதிபா நரேந்திரா தேப்யாவதி தமது 47-வது வயதில் நேற்று காலமானார்.
அந்நாட்டு மன்னர் மஹா வஜிரலோங்க்கோர்னின் முத்த மகளான பஜ்ரகிதிபா, தாய்லாந்து, சுலலாங்கோர்னில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் இரவு மணி 7.48 அளவில் உயிரிழந்ததாக அரண்மனை தெரிவித்தது.
பெருங்குடல் அழற்சி காரணமாக, கடந்த மே 21ஆம் தேதி தொடங்கி இளவரசி பஜ்ரகிதிபாவின் உடல்நிலை மோசமடைந்தது.
குறைந்த இரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் இரத்த உறைதல் கோளாறு போன்ற நோய்களினாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிறந்த மற்றும் அவசர சிகிச்சைகள் பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக அரண்மனை தெரிவித்தது.
அவரது இறுதிச் சடங்கு மிக உயர்ந்த அரச மரியாதைகளுடன் நடத்தப்பட வேண்டும் என்று மஹா வஜிரலோங்க்கோர் உத்தரவிட்டிருப்பதாக அரண்மனை கூறியது.
இளவரசியின் நல்லுடல், அரண்மனையில் உள்ள ஃபிம்ரான் ரித்யா அரியணை மண்டபத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]