ஈப்போ, 13 ஜூன் (பெர்னாமா) -- திட்ட அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டுவதில் அரசாங்கம் ஒருபோது சமரசம் கொள்ளாது.
ஏனெனில், அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமின்றி, சட்டவிரோதக் குடியிருப்புகளை உருவாகும் அபாயத்தையும் கொண்டுள்ளன.
இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தெளிவானது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட எந்தவொரு கட்டிடத்திலும் மக்கள் வசிப்பதைத் தடுக்கும் பொருட்டு, அதற்குத் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் வழங்க அனுமதிக்கப்படாது என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஙா கோர் மிங் தெளிவுப்படுத்தினார்.
ரொஹிங்யா இனத்தினர் போன்ற அந்நிய நாட்டினர் உட்பட, சட்டவிரோதக் குடியிருப்புகளின் இருப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழிமுறைகளில் அந்த நடவடிக்கையும் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
''ரோஹிங்கியா அகதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் குடிநுழைவுத் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள். குடிநுழைவுத் துறை, குறிப்பிட்ட கால இடைவெளியில் திட்டமிடப்பட்ட ஆய்வுகளையும் அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. ஆனால், அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் குடியேறினாலும் சரி அல்லது அகதியாகக் குடியேறினாலும் சரி, குடியேறும் எவரும் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்கு இவை அனைத்தும் அவசியமானவை மற்றும் கட்டாயமானவை,'' என்றார் அவர்.
சிலாங்கூர், ஹுலு லஙாட், சுங்கை தெகாலியில் உள்ள புறநகர் பகுதியில் ரோஹிங்கியா சமூகத்தினரால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட நான்கு மாடி கட்டிடம் தொடர்பான விவகாரம் குறித்து கருத்துரைத்த அவர் அவ்வாறு பதிலளித்தார்.
மற்றொரு நிலவரத்தில், மக்கள் தங்களின் உரிமை கோரப்படாத பணத்தை எளிதாகத் திரும்பப் பெறுவதற்கு உதவும் அரசாங்கத்தின் பிரச்சாரமாக, உரிமை கோரப்படாத பணத்திற்கான நடமாடும் முகப்பு திட்டம் விளங்குவதாக ஙா கோர் மிங் தெரிவித்தார்.
''நாட்டின் பிரஜை ஒவ்வொருவருக்கும் இந்தச் செயல்முறை எளிதானது. உங்கள் அடையாள அட்டை மற்றும் வங்கி அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். ஏதேனும் ஒரு வங்கி அறிக்கை மற்றும் கணக்கு விவரம், உங்கள் அடையாள அட்டையின் நகல் ஆகியவை போதுமானவை; தேவையான ஆவணங்கள் அவ்வளவுதான். அதைத் தலைமை கணக்காய்வாளர் துறை அதிகாரியிடம் காண்பிக்கவும்,'' என்று அவர் கூறினார்.
1965-ஆம் ஆண்டு உரிமை கோரப்படாத பணச் சட்டம், செக்ஷன் 13 (1)-க்கு இணங்க இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சட்டத்தின்படி, ஒரு தொகை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்படாமல் இருக்கும்போது, அப்பணம் நேரடியாக உரிமை கோரப்படாத பணத்திற்கான கணக்கில் சேர்க்கப்பட்டு தேசிய கணக்காளர் துறையால் நிர்வகிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)