ஜார்ஜ் டவுன், 13 ஜூன் (பெர்னாமா) -- முறைகேடுகள், குறிப்பாக மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் பெற்றதும், பள்ளி நிர்வாகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாநிலக் கல்வித் துறைகள், உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நினைவுறுத்தப்படுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்களை அலட்சியப்படுத்தவோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அவை பரவலாக பகிரப்படுவதை அனுமதிக்கவோ கூடாது என்றும் கல்வி அமைச்சர், ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகப் புகார் அளிக்கும்போது, பெற்றோரும் ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம், அமலாக்கத் தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டு, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். சமூக நலத்துறையிடம் பாதுகாப்பு கோருவதற்காக அக்குழந்தையை அழைத்துச் செல்வது மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்று அவர் கூறினார்.
சரவாக், லாவாசில் ஆசிரியர் மற்றும் மாணவர் சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரம், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பின்னரே, விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துரைத்த ஃபட்லினா அவ்வாறு கூறினார்.
அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும், இதுபோன்ற வழக்குகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, போலீசாரிடம் புகார் அளிப்பது உட்பட நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)