Ad Banner
Ad Banner
 பொது

மின்டானோவில் இன்று காலை ரிக்டர் அளவைக் கருவியில் 5.2ஆக பதிவாகிய நிலநடுக்கம்

13/06/2026 06:13 PM

கோலாலம்பூர், 13 ஜூன் (பெர்னாமா) -- பிலிப்பைன்சின் மின்டானோ வட்டாரத்தில் இன்று காலை மணி 10.05-க்கு ரிக்டர் அளவைக் கருவியில் 5.2-ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கம் பிலிப்பைன்சின் கொரோனடல் நகரத்திலிருந்து தெற்கில் சுமார் 101 கிலோமீட்டர் தூரத்திலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தொடக்கக்கட்ட மதிப்பீடுகளில் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக மெட்மலேசியாவின் தகவல்கள் காட்டுகின்றன.

தெற்கு பிலிப்பைன்சை கடந்த திங்கட்கிழமை ரிக்டர் அளவைக் கருவியில் 7.8-ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இதனால் மின்டானோவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு, சபாவில் உள்ள தாவாவ் மற்றும் செம்போர்னாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இப்பேரிடரில், வியாழக்கிழமை வரை, குறைந்தது 47 பேர் உயிரிழந்ததாகவும், 31 பேரைக் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் நிர்வகிப்புக் குழு, என்.டி.டி.ஆர்.ஆர்.எம்.சி, 346,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)