புது டெல்லி, 13 ஜூன் (பெர்னாமா) -- ஓமன் கடற்கரைப் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தியத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைமை அதிகாரியை, நேற்று, இந்தியா அழைத்து கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தது.
கடந்த மூன்று நாள்களில் புது டெல்லி தனது அதிருப்தியை வெளிப்படுத்துவது இது இரண்டாவது முறையாகும்.
பலாவ் கொடியை ஏந்திய 'நியூஸ் ஸ்டோரி' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை நடத்தியத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைமை அதிகாரி ஜேசன் மீக்ஸ், முதல் முறையாக இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை, 20 இந்தியர்கள் பயணித்த மேலும் ஒரு கப்பல் தாக்கப்பட்டது.
இதில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில், கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
புது டெல்லி–வாஷிங்டன் இடையே நெருக்கமான உறவு நிலவும் நிலையில், அமெரிக்கத் தூதரை அழைத்து, இந்தியா எதிர்ப்புத் தெரிவிப்பது அரிதான ஒன்றாகும்.
இதனிடையே, ஓமன் கடற்பரப்பில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகளில் ஒருவரான சிவானந்த் சௌராசியாவின் மரணம் அவரது குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அச்சம்பவத்தை அடுத்து, வளைகுடா பகுதியில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான செட்டபெல்லோ கப்பலில் பணியாற்றிய 24 இந்திய மாலுமிகளில் ஒருவரான சிவானந்த் சௌராசியாவின் மனைவி சுஷிலா தேவியும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இரண்டு சிறு பிள்ளைகளைக் கொண்ட அக்குடும்பத்தில், தொழில் புரியும் ஒரே நபரான சிவானந்த் சௌராசியா, தாக்குதலுக்குள்ளான செட்டபெல்லோ எண்ணெய்க் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் ஒருவராவார்.
இதனிடையே, கப்பல் குழுவினர் உத்தரவுகளை மீறியதைத் தொடர்ந்து, கப்பலின் இயந்திர அறை மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)