சிப்பாங், 13 ஜூன் (பெர்னாமா) -- இன்று தொடங்கி ஜூன் 17-ஆம் தேதி வரையில், மலேசியாவிற்கு ஐந்து நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கும் திமோர்-லெஸ்தே ஜனநாயக குடியரசு அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா, இங்கு வந்தடைந்தார்.
டாக்டர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா மற்றும் இதர பேராளர்களை ஏற்றி வந்த ஏரோ டிலி 8G921 சிறப்பு விமானம், காலை மணி 11.12 அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கே.எல்.ஐ.ஏ, பூங்கா ராயா வளாகத்திற்கு வந்தடைந்த டாக்டர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா மற்றும் இதர பேராளர்களையும் வெளியுறவு அமைச்சின் நெறிமுறைத் தலைவர் இக்ராம் முஹமட் இப்ராஹிம் மற்றும் அனைத்துலக நிகழ்ச்சிகள் மற்றும் மாநாட்டுச் செயலகப் பிரிவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் டத்தோ ரொசாய்னோர் ரம்லி ஆகியோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, கேப்டன் லுக்மான் ஹகிம் அப்துல் கார் தலைமையில், இரண்டு அதிகாரிகள் உட்பட 28 உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை டாக்டர் ஜோஸ் பார்வையிட்டார்.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அதிபரும் பேராளர்களும் காலை மணி 11.58 அளவில் கோலாலம்பூரில் உள்ள தங்களது தங்குமிடத்திற்குப் புறப்பட்டனர்.
இந்தச் சிறப்புப் பயணத்தின்போது, டாக்டர் ஜோஸ் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)