கோத்தா கினாபாலு, 14 ஜூன் (பெர்னாமா) -- நாட்டில் வாழும் பல்வேறு இனங்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, மக்களிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஜூன் 11 தொடங்கி 14-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு இனம், மதம் மற்றும் கலாச்சார பின்னனிகளைக் கொண்ட மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றது, நாட்டின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிப்பதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
''ஒற்றுமை என்பது இனத்தை மட்டும் சார்ந்தது அல்ல. பொருளாதாரம், மக்களின் வளர்ச்சி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உட்படுத்தியது. பிற இனத்தின் கலை மற்றும் கலாச்சாரங்களை அறிந்து கொள்வதன் மூலம் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். குறிப்பாக, சபாவை எடுத்து கொண்டால் இங்கு பல சிறுப்பான்மை மக்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமின்றி, சுமார் 130 மொழிகள் பேசும் நம் மலேசிய நாட்டில் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது நடைபெற்றுள்ளது'', என்றார் அவர்.
அதோடு, பல்வேறு இனங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளின் தொகுப்பாக விளங்கியது மட்டுமின்றி மக்கள் ஒருவரின் கலாச்சாரத்தை மற்றொருவர் அறிந்து, மதித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உயரிய பண்பை எடுத்துக்காட்டியத் தளமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்ததாக, அவர் கூறினார்.
மேலும், பாரம்பரியம், வரலாறு, அறிவு, கலாச்சாரம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் பல்வேறு அரசாங்க அமைப்புகளும் நிறுவனங்களும் பங்கேற்றது, இந்நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியதாக யுனேஸ்வரன் தெரிவித்தார்.
''இதில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. குறிப்பாக, ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய பழஞ்சுவடி காப்பகம், தேசிய அருங்காட்சியகம், தேசிய நூலகம், ஒருமைப்பாட்டு துறை மற்றும் சபாவில் இருக்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் மக்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது'', என்று அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் தேசிய அளவிலான ஒருமைப்பாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் இளைஞர்களின் கணிசமான பங்கேற்பு, எதிர்கால தலைமுறையினரிடையே ஒருமைப்பாட்டு உணர்வு தொடர்ந்து வலுப்பெற்று வருவதைக் காட்டுவதாக யுனேஸ்வரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)