Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அரசியல் ஒத்துழைப்பை உருவாக்குவதில் துரோகம் செய்யும் அம்சம் இருக்கக்கூடாது

14/06/2026 04:38 PM

புத்ராஜெயா, 14 ஜூன் (பெர்னாமா) --  இந்நாட்டில் அரசியல் ஒத்துழைப்பை உருவாக்குவதில் எந்தவொரு தரப்பினராலும் துரோகம் செய்யும் அம்சம் இருக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

குறிப்பாக, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருப்பதால், நல்ல ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அவர் கூறினார்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதும், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதுமே தற்போது மடானி அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

''தேசியப் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதிலும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலுமே எங்கள் கவனம் உள்ளது என்று நான் கூறினேன். ஆனால், கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நாங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்தோம். இந்நாட்டில் ஒத்துழைப்பை வெற்றி பெறச் செய்வதில்ல், துரோகத்தின் கூறுகள் எதுவும் இருக்கக்கூடாது என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன். துரோகம் இல்லை என்றால், அதுவே சிறந்தது'', என்றார் அவர்.

ஒரு நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடையும்போது துரோகப் பிரச்சினைகள் எழக்கூடாது என்று வலியுறுத்திய அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் முந்தைய அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு கூறினார்.

நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்னோவை துரோகிகள் என்று குறிப்பிட்ட பல நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில் டாக்டர் அஹ்மாட் சாஹிட் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், அம்மாநிலத்தின் அரசியல் ஒத்துழைப்பில் சற்று துரோகம் இருப்பதை தங்கள் தரப்பு உணர்வதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)