Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

வேலை வாய்ப்பு & திறன் மேம்பாட்டு திட்டங்களை மனிதவள அமைச்சு விரிவுப்படுத்தி வருகிறது

14/06/2026 04:48 PM

கோலாலம்பூர், 14 ஜூன் (பெர்னாமா) --  உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்வதில் வேலை இழந்து பாதிப்பை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உதவுவதோடு, நாட்டின் தொழிலாளர் சந்தையின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் அம்சங்களில் தலையீட்டை மனிதவள அமைச்சு விரிவுப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டில், முதல் ஐந்து மாதங்கள் முழுவதிலும் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் வேலை இழப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

கடந்த ஜனவரி தொடங்கி மே மாதம் வரை 38 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்று வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலக்கட்டத்தில், உற்பத்தி, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், வாகனம் பழுதுப்பார்ப்பு, நிர்வாக நடவடிக்கை மற்றும் ஆதரவு சேவை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப நிறுவனம் மேற்கொண்ட அமைப்புசார் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் வணிகச் செயல்பாட்டு சீரமைப்பு ஆகியவை இச்சூழ்நிலைக்கு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரமணன் தெரிவித்தார்.

இத்தகைய சவால்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் தொழிலாளர் சந்தை தொடர்ந்து வலுவான நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருவதாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், வேலையிண்மை விகிதம் 3.0 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டிருப்பதாக, அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)