ஜோகூர், 14 ஜூன் (பெர்னாமா) -- இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுவதைத் தொடர்ந்து, இரண்டு தம்பதியர் நேற்று, சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
30 முதல் 34 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும், தம்போய், தாமா ஜோகூரில் உள்ள வீடொன்றில், ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இரவு மணி 7.30க்கு கைது செய்யப்பட்டதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் தெரிவித்தார்.
இரு தம்பதியினரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததும், பெண் சந்தேக நபர்கள் உடன்பிறந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடந்திருக்கலாம் என்று நம்பப்படும் இச்சம்பவத்தில், மூன்று பணிப்பெண்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அப்துல் ரஹமான் குறிப்பிட்டார்.
''அந்தக் காணொளியை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரே பதிவு செய்துள்ளா. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். நான் முன்பே சொன்னது போல, மூன்று பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் அதைப் பதிவுசெய்தார். அவர்தான் அதைப் பரப்பியுள்ளார்,'' என்றார் அவர்.
இன்று, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 20 வயதுகளில் உள்ள அந்த மூன்று பணிப்பெண்களும் தப்பித்திருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும், ஆனால் அவர்கள் இன்னும் நாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)