அமெரிக்கா, 14 ஜூன் (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடக்கக்கட்ட ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், மத்தியஸ்தரான பாகிஸ்தான் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
எனினும், இவ்வளவு விரைவில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதை ஈரான் மறுத்துள்ளது.
அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்புக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை மின்னியல் முறையில் கையெழுத்திடப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கும் இஸ்லாமாபாத் தயாராகி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரானுடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்படுவதாகவும், அதன் பின்னர் ஹார்முஸ் நீரிணை, அனைவருக்கும் திறக்கப்படும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கான சாத்தியத்தை மறுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பாகாயி, ஆனால் அத்தகைய ஒப்பந்தம் வரும் நாள்களில் கையெழுத்தாகலாம் என்று தெரிவித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, அடுத்த ஓரிரு நாட்களில் தனது பேச்சுவார்த்தைக் குழுவை ஜெனீவாவுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்ப ஈரானுக்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று Baghaei கூறியதாக, தஸ்னிம் செய்தி நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)