கோலாலம்பூர், ஜூன் 14 (பெர்னாமா) -- தேசிய ஊடகவியலாளர் தினம், HAWANA கொண்டாட்டத்தை முன்னிட்டு முதன்முறையாக நடத்தப்பட்ட 'Fun Walk HAWANA' நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதோடு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும், இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடத்த மலேசிய தேசிய செய்தி நிறுவனமான, பெர்னாமாவுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.
''ஆம். இந்த மாதிரி வரவேற்பு இருந்தால் மீண்டும் நடத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், பங்கேற்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு நிறைய நேர்மறையான கருத்துகள் கிடைத்தன; மிகவும் சிறப்பாக இருந்ததாக அவர்கள் கூறினார். மேலும், பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும்,'' என்றார் அவர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், Taman Tasik Titiwangsa-இல் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு Fun Walk HAWANA நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளரிடம் டத்தின் படுக்கா நூருல் அஃபிடா இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, மக்களை அமைதியான சூழலில் ஒன்றிணைப்பதாக அவர் கூறினார்.
ஹவானா கொண்டாட்டத்தை முன்னிட்டு இவ்வாண்டு முதன்முறையாக, பெர்னாமாவின் வழி தொடர்பு அமைச்சு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
ஊடகப் பணியாளர்கள், அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சமூக அடிப்படையிலான பொழுதுபோக்குச் நிகழ்ச்சிகள் மூலம் ஊடகப் பணியாளர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு தளமாக இந்நிகழ்ச்சி அமைந்திருப்பதாக பங்கேற்பாளர்கள் சிலர் தங்களின் கருத்துகளை பெர்னாமா தொலைக்காட்சியிடம் பகிர்ந்து கொண்டனர்.
'' இன்று வானிலையும் வழக்கம்போல் இருந்தது. அனைவருடனும் இணைந்து நடக்கும்போது ஊக்குவிப்பாக இருந்தது,'' என்றனர்.
2026ஆம் ஆண்டுக்கான Fun Walk HAWANA நிகழ்ச்சியில், உடற்பயிற்சி, சுகாதாரப் பரிசோதனைகள், கண்காட்சி, பாரம்பரிய விளையாட்டுகள், வண்ணம் தீட்டும் நடவடிக்கை, ஐம்பதாயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அதிர்ஷ்டக் குலுக்கல் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)