அமெரிக்கா, 15 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி.
இன்று, அமெரிக்காவின் ஹூஸ்டன் அரங்கில் நடைபெற்ற E பிரிவு ஆட்டத்தில் அறிமுக அணியாக இம்முறை களமிறங்கிய குராசோவை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
இதன்வழி மூன்று புள்ளிகளோடு பட்டியலில் ஜெர்மனி முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், குராசோ கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தொடரில் முதல் முறையாக விளையாடும் குராசோ மீது ஜெர்மனி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
அதன் பலனாக ஆறாவது நிமிடத்திலேயே ஜெர்மனி தனது கோல் வேட்டையைத் தொடங்கி இரு கோல்களைப் போட்டது.
அதேவேளையில், குராசோவின் ஒரே கோல் 21-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
ஜெர்மனியின் மூன்றாவது கோலுடன் முதல் பாதி முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 49-வது நிமிடம் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவ்வணி நான்காவது கோலாக மாற்றியது.
பின்னர், தற்காப்பு ஆட்டத்தின் மூலம் இரண்டாம் பாதியிலும் ஜெர்மனியின் ஆதிக்கம் தொடர்ந்ததில் அது வரிசையாக மூன்று கோல்களைப் போட்டது.
இதனால், குராசோவின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
நான்குமுறை உலக வெற்றியாளரான ஜெர்மனி, இம்முறையும் அதனை கைப்பற்றும் இலக்கில் முதல் ஆட்டத்திலேயே அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)