Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பாதுகாப்பு எச்சரிக்கைகளை மீறி தாய்லாந்து எல்லையில் குவியும் மலேசியர்கள்

15/06/2026 06:03 PM

கோத்தா பாரு, 15 ஜூன் (பெர்னாமா) --  வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆர்வம், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கத் தூண்டும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறிப்பாகப் பண்டிகைக் காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாள்களில் அவர்கள் தெற்கு தாய்லாந்திற்குள் நுழைவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கத் துணிகின்றனர்.

கிளந்தானின் மூன்று அதிகாரப்பூர்வ எல்லை நுழைவாயில்களான குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS ஆகியவற்றில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புகள், அதிக அளவிலான மக்கள் அங்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதைக் காட்டுவதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.

பாசிர் மாசில் உள்ள ரந்தாவ் பஞ்சாங், தும்பாட்டில் உள்ள பெங்காலான் குபொர் மற்றும் தானா மெராவில் உள்ள புக்கிட் பூங்கா ஆகியவே அந்த மூன்று நுழைவாயில்கள் ஆகும்

வார நாட்களில் சுமார் 3,000 பேர் அந்த எல்லையை கடப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில், வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை 4,000-க்கும் அதிகமாக உள்ளதாக டத்தோ முஹமட் யூசோஃப் கூறினார்.

அதுவே, பள்ளி விடுமுறைக் காலங்களில் ​​இந்த எண்ணிக்கை ஒரு நாளில் 6,000 முதல் 7,000 பேர் வரை கணிசமாக அதிகரிப்பதாகவும் அவர் விளக்கினார்.

''எப்போது, எங்கு வெடிப்பு சம்பவங்கள் அல்லது அதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிகழும் என்று நமக்குத் தெரியாது என்பதால்தான் நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். மேலும், விஸ்மா புத்ரா (மலேசிய வெளியுறவு அமைச்சு) கூட கடந்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதத்திலிருந்தே பயண எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தென் தாய்லாந்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்குth தொடர்ந்து அறிவுறுத்தும் எச்சரிக்கைகள் தற்போதும் நடைமுறையில் உள்ளன'', என்றார் அவர்.

மேலும், கிளந்தான் மக்கள் அம்மாநிலத்திலேயெ விடுமுறையைக் கழிக்க ஈர்க்கக்கூடிய சுற்றுலா வசதிகள் தற்போது போதுமான அளவில் இல்லை என்றும் யூசோஃப் மாமாட் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)