புத்ராஜெயா, 16 ஜூன் (பெர்னாமா) -- விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு கல்விச் சட்ட திருத்த மசோதாவிற்கு ஏற்ப, நாட்டில் உள்ள இடைநிலைப் பள்ளிகளின் சேர்க்கை விகிதத்தை 95 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்த்த கல்வி அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டில் சுமார் 92 விழுக்காடாக இருந்த ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம், 2026-ஆம் ஆண்டில் 99 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இந்த சாதனை, 23 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட கட்டாயக் கல்விக் கொள்கையின் வெற்றியை நிரூபிப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
''கடந்த ஆண்டில், நமது உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை 94 விழுக்காடாக இருந்தது. சட்டப்பூர்வமான அமலாக்கங்கள் மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளின் மூலமாகவும், இந்த சேர்க்கை விகிதத்தை மேலும் அதிகரிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம், நாம் இலக்கு வைத்துள்ள 95 விழுக்காட்டிற்கும் மேலான சேர்க்கை விகிதத்தை நம்மால் எட்ட முடியும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
இடைநிலைப் பள்ளி வரை கல்வி கற்பதைக் கட்டாயமாக்கும் கல்விச் சட்டத் திருத்தம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது இச்சட்டம் அரசாங்க பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்திருத்தம் யாரையும் தண்டிப்பதற்காக அமல்படுத்தப்படவில்லை என்றும், மாறாகப் படிவம் ஐந்து வரை பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து முடிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம் என்றும் வோங் விளக்கமளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)