கோலாலம்பூர், 16 ஜூன் (பெர்னாமா) -- 200 கோடி யூரோ வரையிலான புதிய முதலீடுகள் மூலம் கெடாவின் கூலிம் நகரில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த AT&S நிறுவனம் எடுத்துள்ள முடிவு, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்ப முதலீட்டுத் தளமாக மலேசியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இந்த முதலீடு நாட்டின் செமிகண்டக்டர் எனப்படும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறைக்கான சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, மலேசியர்களுக்கு உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தெளிவான கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை, நல்லாட்சி மற்றும் பொருளாதார மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை, மலேசியாவை மேம்பட்ட தொழில்நுட்ப முதலீடுகளுக்கான ஒரு முக்கிய இடமாகவும், வட்டாரத்தில் புதிய பொருளாதார வளர்ச்சியின் மையமாகவும் சரியான பாதையில் செலுத்துவதை AT&S போன்ற அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கை நிரூபிப்பதாக பிரதமர் கூறினார்.
நாட்டின் இலக்கவியல் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீதான பரஸ்பர நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை வளர்ப்பதில் இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இது, தற்போது நாட்டின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான முதலீடாக உருமாறியுள்ளது.
கூலிமில் உள்ள தனது உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்துவதற்காக 150 கோடி முதல் 200 கோடி யூரோக்கள் வரை முதலீடு செய்ய தனது நிறுவனம் உறுதி கொண்டுள்ளதாக AT&S தனது அகப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது அன்வார் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)