ஷா ஆலம், 16 ஜூன் (பெர்னாமா) -- மலேசிய இக்ராம் அமைப்பு, இக்ராமின் உறுப்பினர் ஒருவர், 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்பது கோடியே 80 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை கையூட்டாகப் பெற்றதாக இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 158 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினார்.
நீதிபதி டத்தோ முஹமட் நாசிர் நோர்டின் முன்னிலையில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றஞ்சாட்டப்பட்ட 57 வயதான ஃபக்ருடின் அப்துல் கரிம் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.
முதல் 149 வரையிலான குற்றச்சாட்டுகளின்படி, ஒரு பொது அமைப்பு அதிகாரி அதாவது இக்ராமின் உறுப்பினர் என்ற முறையில், இக்ராம் மலேசியா உலு சிலாங்கூர் மாவட்ட அமைப்பிற்குச் சொந்தமான மேபேங்க் இஸ்லாமிக் புக்கிட் பிந்தாங் கிளைக் கணக்கிற்கு அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவராக நியமிக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பரான ஒரு அரசு சாரா அமைப்புக்கு எட்டு கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மலேசிய இக்ராம் அமைப்பின் உலு சிலாங்கூர் கிளைக்குச் சொந்தமான நிதியை, 149 நிதிப் பரிமாற்றங்களின் வழி, எஹ்சான் கேர் சொலுஷனுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிற்கு அனுப்ப உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
150 முதல் 158 வரையிலான குற்றச்சாட்டுகளின்படி, அவர் சம்பந்தப்பட்ட அரசு சாரா நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியை ஒன்பது நிதிப் பரிமாற்றப் பரிவர்த்தனைகள் வழி, தனது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு, மொத்தம் ஒரு கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டை அனுப்ப உத்தரவிட்டு, அதே குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அவர் அந்த அனைத்து குற்றங்களையும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6 மூதல் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ரவாங், புக்கிட் பெருந்துங்கில் உள்ள மலேசிய இக்ராம் அமைப்பின் உலு சிலாங்கூர் கிளையில் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரை இருவரின் ஜாமீனில், ஐந்து லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கின் மறு செவிமடுப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)