Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது - டிரம்ப்

16/06/2026 05:37 PM

பிரான்ஸ், 16 ஜூன் (பெர்னாமா) -- ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுவிட்டதாகவும், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர், ஒப்பந்தத்தின் உரை வெளியிடப்படும் என்றும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையும் முழுமையாகத் திறக்கப்படவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

''அது கையெழுத்தாகிவிட்டது என்பதைச் சொல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒப்பந்தம் முழுவதும் கையெழுத்திடப்பட்டுவிட்டது. மேலும், அந்த நீர்வழிப்பாதை ஏற்கனவே பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்தபடி, அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த ஓரிரு கண்ணிவெடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அடிப்படையில், கப்பல்கள் இப்போதுதான் கடலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை, அது முழுமையாகத் திறக்கப்பட்டுவிடும்,'' என்றார் அவர்.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இலக்கவியல் முறையில் கையெழுத்திடப்பட்டதாகவும், எந்த நிதியும் வெளியாக்கப்படவில்லை என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

இது இன்னும் ஒரு கட்டமைப்பு வடிவமாக இருந்தாலும், கடந்த பிப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த இந்த மோதலைத் தீர்ப்பதற்கான மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த ஒப்பந்தம் அமைந்தது.

இதனிடையே, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது என்று ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தமது ட்ருத் சோசியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா ஈரானுக்கு 30 கோடி டாலர் செலுத்துவதாக வெளியான செய்திகள் போலியானவை என்றும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)