கோலாலம்பூர்: 16 ஜூன் (பெர்னாமா) -- சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு 57 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதி செலவிடப்பட்ட நிலையில், கடந்தாண்டு மட்டும் 330 கோடி ரிங்கிட் நிதிச் செலவை ஏற்படுத்தியதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 28 பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவதுடன், அது தொடர்பான பிரச்சனையால்,
மேற்கொள்ளப்படும் சிகிச்சை, குறிப்பாக Dialysis எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையைப் பெறுவதற்காக, அதிகமானோர் பணத் தேவையில் உள்ளனர்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் ஆரோக்கிய மடானி எனும் திட்டத்தில், 1,300 பேருக்கு தலா 5,000 ரிங்கிட் வரையிலான நிதியுதவி வழங்கப்படுகிறது.
B40 மற்றும் M40 பிரிவினரை இலக்காகக் கொண்டு இந்நிதியுதவி வழங்கப்பட்டாலும் ஈ.எஸ்.ஆர்.டி எனப்படும் இறுதி நிலை சிறுநீரக நோயாளிக்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவிந்தரன் நாயர் தெரிவித்தார்.
''எங்களின் முன்னுரிமை இறுதி நிலை சிறுநீரக நோயாளிகள். இவர்களுக்கு இப்பண உதவி செய்கிறோம். அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நாங்கள் பணம் செலுத்துவோம்,'' என்றார் அவர்.
இத்தொகை ஒருவரின் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், போக்குவரத்து சேவை உட்பட இந்த சிகிச்சையை மேற்கொள்ள தேவைப்படும் இதர தேவைகளுக்கு அல்ல என்று அவர் விளக்கினார்.
''சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பட்சத்தில் ஒரு வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை அதன் சுத்திகரிப்பை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 180-இல் இருந்து 200 ரிங்கிட் வரை தேவைப்படும். சிகிச்சைக்கு மட்டும் இத்தொகை. எனவே, ஒரு சிறு விழுக்காட்டு உதவிக் கிடைப்பவர்கள் அல்லது எந்த உதவியும் கிடைக்காதவர்கள் தான் எங்களின் இலக்கு,'' என்றார் அவர்.
இந்நிலையில், 1300 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்நிதியுதவி, சரியான மற்றும் முழுமையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய உதவியாக அமையும் என்று அவர் விவரித்தார்.
ஆவணச் சமர்ப்பிப்பு முழுமை பெறாத சூழலில் மேல்முறையீட்டை செய்பவர்களுக்கு, அதன் செயல்முறையில் நிச்சயம் காலத் தாமதம் ஏற்படும் என்பதையும் ரவிந்தரன் நிராகரிக்கவில்லை.
''முழுமையான ஆவணங்களைக் கொண்ட விண்ணப்பங்களை மட்டுமே நாங்கள் சரிபார்ப்போம். முதலில் அனுப்பினாலும் கூட, ஆவணங்கள் முழுமையாக இல்லாவிடில் நாங்கள் அவற்றை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டோம். முழுமை பெறாத ஆவணங்களுக்கு காத்திருந்து அவற்றை சரிபார்ப்பதற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படும்,'' என்று அவர் விவரித்தார்.
கடந்த ஜூன் ஐந்தாம் தேதி தொடங்கி இதுவரை கிடைத்த விண்ணப்பத்தில் 20 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக கூறிய அவர், மிகுந்த கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இது குறித்த தகவல்களுக்கு 03-8886 6239/ 6221 என்ற எண்ணிலோ அல்லது sks@mitra.gov.my எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
கூகள் படிவ இணைப்பு (Google form): https://forms.gle/rvNPZ1rX4hpzAvVU8
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]