Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

5 நாள்கள் அலுவல் பயணத்திற்குப் பின்னர், நாட்டிற்கு புறப்பட்டார் ரமோஸ் ஹொர்ட்டா

17/06/2026 03:14 PM

சிப்பாங், 17 ஜூன் (பெர்னாமா) --  இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வட்டார உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மலேசியாவிற்கு மேற்கொண்ட ஐந்து நாள்கள் சிறப்புப் பயணத்தை நிறைவுச் செய்த தீமோர் லெஸ்தே அதிபர் ஜொஸ் ரமோஸ் ஹொர்ட்டா, இன்று அதிகாலை டிலிக்கு புறப்பட்டார்.

அதிகாலை மணி 2.15-க்கு புறப்பட்ட BATIK AIR விமானத்தில் ஏறுவதற்காக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் முனையம் ஒன்றுக்கு ரமோஸ் ஹொர்ட்டாவும் அவரின் பேராளர் குழுவினரும் முன்னதாகச் சென்றிருந்தனர்.

முன்னதாக, அதிகாலை மணி 1.33-க்கு கே.எல்.ஐ.ஏ-வில் உள்ள பூங்கா ராயா வளாகத்திற்கு வந்தடைந்த ரமோஸ் ஹொர்ட்டா, கேப்டன் ஜெ.லிங்கேஶ்ரீ ராவ் தலைமையிலான அரச Renjer Rejimen முதலாவது Batalion-ஐ சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் 26 உறுப்பினர்களைக் கொண்ட மரியாதை அணிவகுப்பை பார்வையிட்டார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி 'சுமூகமற்ற காலக்கட்டத்தை கையாண்டு, அமைதியை நாடு' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் ரமோஸ் ஹொர்ட்டா கலந்துக் கொண்டார்.

தீமோர் லெஸ்தே மற்றும் மலேசியா இடையிலான இருதரப்பு உறவு நல்ல நிலையில் இருப்பதாக கூறிய அவர், பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் நாட்டின் சாதனைகளையும் பாராட்டினார்.

1999-ஆம் ஆண்டு அமைதிப் படையை ஈடுபடுத்தியது உட்பட 2002-ஆம் ஆண்டு தீமோர் லெஸ்தே சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே அந்நாட்டிற்கு மலேசியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான ரமோஸ் ஹொர்ட்டா தமது நன்றியைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)