Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தலைவர்கள் யோசனை இல்லாமல் செயல்படுவது நாட்டிற்கும் மக்களுக்கும் துரதிர்ஷ்டவசமே

17/06/2026 03:19 PM

புத்ராஜெயா, 17 ஜூன் (பெர்னாமா) --  தொலைநோக்குப் பார்வை, வியூகச் சிந்தனை மற்றும் முடிவெடுப்பதில் அவசரப்படாத தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து ஹிஜ்ரா நிகழ்வு ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக மாட்சிமை தங்கிய துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரின் ஷா எடுத்துரைத்தார்.

தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சீறிப்பாய்ந்து, யோசனையற்ற முறையில் செயல்படுவது, நாட்டிற்கும் மக்களுக்கும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

ஆழமான பரிசீலனை இன்றி அவசரமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், குறிப்பாக குறுகியகால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போது ​​நாட்டிற்குப் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்று சுல்தான் நஸ்ரின் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை, இறுதியில் அப்பாவி மக்களே எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

''தலைவர்கள் தங்கள் மன உந்துதல்கள் மற்றும் உணர்ச்சித் தாக்கங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிவசப்பட்டும், அவசரமாகவும், பொறுப்பற்ற முறையிலும் செயல்பட்டு, ஆழ்ந்து சிந்திக்காமல் குறுகிய கால நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, தன்னிச்சையாக முடிவெடுக்கும் சூழல் நிலவும்போது, ​​அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அப்பாவி மக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இது ஒரு நாட்டிற்கும் தேசத்திற்கும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது'', என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் புத்ரா பள்ளிவாசலில் நடைபெற்ற தேசிய அளவிலான மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது, பேராக் சுல்தானுமான சுல்தான் நஸ்ரின் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)