Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

11 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 14.63 கிலோகிராம் கஞ்சா பூக்கள் பறிமுதல்

17/06/2026 03:23 PM

அலோர் ஸ்டார், 17 ஜூன் (பெர்னாமா) --  கடந்த திங்கட்கிழமை புக்கிட் காயூ ஹித்தாமில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-இல் மேற்கொள்ளப்பட சோதனையில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 14.63 கிலோகிராம் எடையிலான கஞ்சா பூக்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

இச்சோதனையின் போது ​​கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் உயர் கல்வி கழகத்தில் பயிலும் 24 வயதான உள்ளூர் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் துணைத் தலைவர் டி.சி.பி படெருல்ஹிஷாம் பஹருடின் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் சந்தைகளுக்கு அனுப்பும் முன்னர், அண்டை நாட்டில் இருந்து பொருட்களைக் கொண்டு வரும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விநியோகிப்பாளராக அச்சந்தேக நபர் செயல்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தாய்லாந்தின் டானோக் பகுதி சுற்றுவட்டாரத்தில் போதைப் பொருளைப் பெற்று, அவற்றை வாகனத்தின் பின் இருக்கையில் மறைத்து, ICQS வளாகம் வழியாக மலேசியாவிற்குள் கொண்டு வருவதே அவரது செயல்முறையாக இருந்ததாக டி.சி.பி படெருல்ஹிஷாம் கூறினார்.

''பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டாகும். அதைக் கொண்டு சுமார் 73,150 போதைப்பித்தர்களுக்கு விநியோகிக்க முடியும் என்றும், வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது'', என்றார் அவர்.

மேலும், அச்சந்தேக நபர் மே 25-ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

அக்கும்பல் குறிப்பிடும் இடங்களுக்கு விநியோகிப்பதற்காக நான்கு முறை போதைப்பொருளைக் கொண்டு வந்ததாகவும், ஒவ்வொரு விநியோகத்திற்கும் நான்காயிரம் ரிங்கிட் பெற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நேற்றிரவு, கெடா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படெருல்ஹிஷாம் அத்தகவல்களைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)