சுங்கை பட்டாணி, 17 ஜூன் (பெர்னாமா) -- குருன், ஹோபார்ட் இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் நல்லுடல், இன்று அதிகாலை மணி 5.25 அளவில் மெர்போக்கில் உள்ள Al Busyra பள்ளிவாசலின் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, 40 வயதான கோப்ரல் நோரஸ்மி அபு பகாரின் உடல், அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் நேற்று பின்னிரவு மணி 2.30-க்கு பிரேதப் பரிசோதனை நிறைவடைந்தது.
இன்று அதிகாலை மணி 3.35 அளவில், அவரின் நல்லுடல் மெர்போக்கில் உள்ள கம்போங் துப்பா லாமாவில் அமைந்துள்ள அவரது குடும்ப இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரி நல்லுடல் அங்கிருந்து மெர்போக், Al Busyra பள்ளிவாசலுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, தொழுகை மேற்கொள்ளப்பட்டது.
தேசியப் பாதுகாப்புப் படையில் அவர் ஆற்றிய சேவையையும் தியாகங்களையும் பாராட்டும் விதமாக, இறுதிச் சடங்கு இராணுவ முறைப்படி நடத்தப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், ஹோபார்ட் இராணுவ முகாமில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த கீழ் நிலை இராணுவ அதிகாரி சித்தி கடிஜா சுங்ஜிப்பின் நல்லுடல், இன்று பிற்பகல் மணி 1.15 அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், குளுவாங், தாமான் ஶ்ரீ லம்பாக் இஸ்லாமிய மைத்துக் கொல்லையில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க சடங்கின்போது, மக்கோத்தா முகாமின் 7-வது மலேசிய காலாட்படைத் தலைமையகத்தின் 7-வது படைப்பிரிவின் தளபதி, Brigedier ஜெனரல் டத்தோ சுல்ஹெல்மி மஸ்டார், இறந்தவரின் தந்தையான 65 வயதுடைய சுங்ஜிப் ஜயிசிடம் தேசியக் கொடியை அடையாளப்பூர்வமாக ஒப்படைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)