கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- சுமார் 25 லட்சம் ரிங்கிட் கையூட்டு தொகை கேட்டு, பெற்றதாக சந்தேகிக்கப்படும் நாட்டின் வடப் பகுதியில் உள்ள அரசாங்க நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய இயக்குநர்கள் இருவர் உட்பட 13 நபர்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நேரடி நியமனப் பணிகளையும் விலைப்புள்ளிகளையும் ஆக்கிரமிக்க, கூட்டு முகவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை நியமிக்க தூண்டுவதற்க்கு அக்கையூட்டு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை, பேராக், எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, இரவு மணி 8 முதல் 11-க்குள் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட 10 ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக, எஸ்.பி.ஆர்.எம்-மின் வியூக தகவல் தொடர்பு பிரிவு, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 13 நபர்களில் எண்மர் அரசாங்க ஊழியர்கள் என்றும், எஞ்சிய ஐவர் பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களாவர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2024 தொடங்கி 2026-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட அச்செயலுக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் உடந்தையாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, எஸ்.பி.ஆர்.எம் கூறியது.
இதனிடையே, 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 17(a)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)