கசான், 17 ஜூன் (பெர்னாமா) -- ரஷ்யா, கசானில் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெறவுள்ள ஆசியான்-ரஷ்யா உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கு சென்றடைந்தார்.
அன்வாரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், உள்ளூர் நேரம்படி இரவு மணி 10.20-க்கு கசான் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பிரதமருடன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் உட்பட பிரதமர் அலுவலகம மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
ரஷ்யாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சியொங் லூன் லை, டாடர்ஸ்தான் குடியரசின் அதிபர் ருஸ்தாம் மின்னிகானோவ் தலைமையிலான ரஷ்ய பேராளர்கள், டாடர்ஸ்தான் இலக்கவியல் துறை அமைச்சர் இல்யா நச்வின், கசான் நகர மேயர்இல்சூர் மெட்ஷின் மற்றும் அந்நாட்டின் நெறிமுறை துறை அதிகாரிகள் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்றனர்.
இதனிடையே, இரு நாள்களுக்கு நடைபெறவுள்ள அந்த உச்சநிலை மாநாடு, 1991-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் தொடங்கிய ஆசியான்-ரஷ்யா உறவுகளின் 35-வது ஆண்டு நிறைவைக் குறிப்பதாக விஸ்மா புத்ரா கூறியுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் இரு நாடுகளும் அடைந்த முன்னேற்றங்களை ஆசியான் மற்றும் ரஷ்யா மதிப்பாய்வு செய்வதற்கும், வியூக கூட்டமைப்பின் கீழ் எதிர்கால ஒத்துழைப்பின் திசையை வகுப்பதற்கும் இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)