Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஆசியான்-ரஷ்யா வர்த்தக வியூகத் திட்டம் இறுதி; பொருளாதார உறவுகளில் அடுத்தகட்ட நகர்விற்கு உத்வேகம்

17/06/2026 06:19 PM

கசான், ஜூன் 17 (பெர்னாமா) -- ஆசியான்-ரஷ்யா வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான 2026 லிருந்து 2035 வரைக்குமான வியூகத் திட்டம் இறுதிசெய்யப்பட்டது, பொருளாதார உறவுகளில் அடுத்தகட்ட நகர்விற்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

ஆனால், அவற்றை நிஜமாக்குவதற்கு தகுந்த சூழல் அமைவது முக்கியமாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டம், வர்த்தகம் மற்றும் முதலீடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.

அதோடு, 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட கூட்டமைப்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளின் அடுத்த கட்டத்திற்கான ஒரு வழிகாட்டு நெறிமுறையை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

''ஏனெனில், அறிவிப்புகளும் கட்டமைப்புகளும் மட்டும் போதாது. நாம் சாதகமான சூழல்களை உருவாக்க வேண்டும்; அவை கொள்கைகளை வகுத்து, தடைகளை அகற்றி, பொருளாதார ஒத்துழைப்பை எளிதாக்குகின்றன. எனவே, இன்றைய கருத்தரங்குகள் முக்கியமானவை. இதற்குக் காரணம், இவை ஒத்துழைப்பை அனுமதிக்கும் தொடர்புகளையும், பங்காளித்துவத்தையும், கருத்துக்களையும் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒன்றுகூடல்களாகும்,'' என்றார் அவர்.

ரஷ்யா மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வர்த்தக மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆசியான்-ரஷ்ய வணிக கலந்துரையாடலில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)