ஹைதராபாத், 18 ஜூன் (பெர்னாமா) -- இந்தியாவும் அமெரிக்காவும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஜி7 உச்சநிலை மாநாட்டில் நடைபெற்ற சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோர் விவாதித்த முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
நரேந்திர மோடியுடன் மிகச் சிறந்த கலந்துரையாடல் மேற்கொண்டதோடு, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பணியாற்றி வருவதாகவும் டோனல்ட் டிரம்ப் கூறினார்.
''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. அமெரிக்கா–இந்தியா உறவுகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. மேலும், அமெரிக்கா தற்போது தனது வரலாற்றிலேயே மிகச் சிறந்த பொருளாதார மற்றும் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது'', என்றார் அவர்.
மோடியைக் கடினமான பேச்சுவார்த்தையாளர் என வர்ணித்த டிரம்ப் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மோடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா தாக்கப்பட்டால், அமெரிக்கா இந்தியாவைப் பாதுகாக்கும் எனவும் டிரம்ப் கூறினார்.
டிரம்பின் இந்தியப் பயணத்திற்காக அமெரிக்காவைக் கடந்த சில மாதங்களாக இந்தியா வலியுறுத்தி வந்துள்ளது.
''எங்கள் இரு தரப்புக் குழுக்களும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நோக்கங்களை எட்டுவதில் நாம் விரைவாக முன்னேறி வருகிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்'', என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்விரு தலைவர்களும் தங்கள் கருத்துகளை அவ்வாறு பகிந்து கொண்டனர்.
இதனிடையே, ஈரானுடனான போரை நிறுத்தவும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் வகைசெய்யும் இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
G7 உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உடன் இரவு நேர விருந்துபசரிப்பின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் அமெரிக்கா, ஈரான் நாடுகள் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக விலக்கிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் போக்குவரத்திற்காக அடுத்த 60 நாட்களுக்குத் திறந்துவிட ஈரான் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)