பத்து காஜா, 18 ஜூன் (பெர்னாமா) -- கடந்த வாரம் கம்போங் காஜாவில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவரைக் கொலை செய்ததாக, தோட்டக்காரர் மீது இன்று பத்து காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் முஹமட் ஹரித் முஹமட் மஸ்லான் முன்னிலையில், முஹமட் ஃபரிசால் ஃபஸ்லி முஹமட் சுல்ஃகிப்ளி என்பவர் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி அதிகாலை மணி 4.30-லிருந்து 5.49-க்குள், ஜாலான் த்ரான்ஸ் பேராக், பேராக் தெங்கா எனும் முகவரியில் உள்ள முதன்மை சாலை ஓரத்தில் 29 வயதுடைய முஹமட் ஃபஹ்மி அப்துல்லா என்பவரைக் கொலை செய்ததாக முஹமட் ஃபரிசால் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இக்குற்றம் விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்தது.
பிரேத பரிசோதனைஅறிக்கை சமர்ப்பிப்புக்காக இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பு ஜூலை 20ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)