போர்ட்டிக்சன், 18 ஜூன் (பெர்னாமா) -- இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் பாலியல் சீண்டல் தொடர்பாக மொத்தம் 388 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-மின் புள்ளிவிவரங்களை அடிப்படையில் அந்த எண்ணிக்கை இப்பதிவு பெற்றுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் 477ஆக பதிவாகி இருந்த பாலியல் சீண்டல் சம்பவங்கள், கடந்தாண்டு ஆயிரத்து 38-ஆக அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அதிகரிப்பு, பாலியல் சீண்டல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வைக் காட்டுவதோடு மட்டுமின்றி, அத்தகைய அநீதிகளுக்கு எதிராக மௌனம் காக்காமல், துணிச்சலுடன் முன்வந்து புகார் அளிக்கும் சமூகத்தின் விழிப்புணர்வையும் தைரியத்தையும் பிரதிபலிப்பதாக லிம் தெரிவித்தார்.
"கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், பாலியல் சீண்டல் சம்பவங்களில் பெரும்பாலானவை பணியிடங்களிலேயே பதிவாகின்றன. அதேவேளை, குடும்ப மற்றும் உறவினர் வட்டாரங்களுக்குள்ளும் இத்தகைய பிரச்சனைகள் இடம்பெறுவது கவலைக்குரிய ஒன்றாகும். தொழில், குடும்ப உறவுகள் அல்லது சமூக அழுத்தங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளை வெளிப்படுத்தவும் புகாரளிக்கவும் இன்னமும் தயக்கம் காட்டி வருகின்றனர்", என்றார் அவர்.
வியாழக்கிழமையன்று, போர்ட்டிக்சனில் நடைபெற்ற 'வன்முறைக்கு சமரசம் இல்லை: பாலியல் துன்புறுத்தலை வேண்டாம் என்போம்' என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)