Ad Banner
Ad Banner
 பொது

பகடிவதை எதிர்ப்பு சட்டம்; பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான சட்ட விளக்கங்கள்

22/06/2026 05:16 PM

கோலாலம்பூர், 22 ஜூன் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு பகடிவதை எதிர்ப்பு சட்டம், குடும்பங்களுக்கான ஒன்றிணைந்த கடப்பாடு என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதால், தங்களின் பிள்ளைகள் பகடிவதை செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் பட்சத்தில், பெற்றோரும் இனி சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று, சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் அண்மையில் அறிவித்திருந்தார்.

பகடிவதை புரிபவரை கடந்து, அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அக்குற்றத்திற்கான பொறுப்பேற்க வேண்டும் என்று விரிவுபடுத்தப்பட்டிருப்பது, பெற்றோர் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கும் நிலையில், அது குறித்து சட்ட ரீதியிலான சில விளக்கங்களை அளிக்கிறார் வழக்கறிஞர் சுதா ஜெயன் ராஜூ.

பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்குகள் உட்பட அவற்றின் கடுமையான தாக்கங்களை கருத்தில் கொண்டே இப்புதிய நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிள்ளையின் அடிப்படை குணாதிசயம் வீட்டிலிருந்தே தொடங்குவதால், அதில் பெரும் பங்காற்றும் பெற்றோரும் தற்போது இச்சூழலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளதாக சுதா ஜெயன் ராஜூ விவரித்தார். 

''குற்றம் நிகழும்போது வீட்டில் பெற்றோர் பிள்ளைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள், அக்கறை செலுத்துகிறார்கள், எவ்வித நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தவே இந்த நடுவர் மன்றத்தை அமைத்துள்ளனர்,'' என்றார் அவர். 

நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணைகளை போலவே, இந்த நடுவர் மன்றத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று சுதா மேலும் விளக்கினார். 

எனவே, ஒவ்வொரு வழக்கிற்கும் தகுந்த ஆதாரங்களும் சாட்சிகளும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

''ஒரு மாணவன் அல்லது மாணவி பகடிவதை செய்தால் உடனே சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தண்டனையை விதிக்கமாட்டார்கள். தகுந்த ஆதாரம் மற்றும் சாட்சிகளுடன் அதனை தீர விசாரித்தப் பின்னரே தண்டனை அளிப்பார்கள். பாதிக்கப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் பெற்றோரும் தங்கள் பிள்ளை பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார் அவர். 

அதேவேளையில், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பகடிவதையைப் புரியும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்து சுதா தெளிவுப்படுத்தினார். 

''பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கான மனநல ஆலோசனை போன்றவை அளிக்கப்படும். இதற்கு முன்னர் பள்ளி நிர்வாகம் விசாரிக்கும் விதம் வேறாக இருந்தது. இந்நடுவர் மன்றம் மேற்கொள்ளும் நடவடிக்கை வேறாக இருக்கும். அம்மன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது,'' என்றார் அவர். 

கடந்தாண்டு மட்டும் 14,000 பகடிவதைச் சம்பவங்கள் பதிவாகி பெரும் கவலையை உருவாக்கியிருக்கும் நிலையில், அவற்றை கையாள்வதற்காக, சட்ட வல்லுநர்கள் மற்றும் சிறார் நலத் துறை வல்லுநர்கள் அடங்கிய மொத்தம் 56 நடுவர் மன்ற உறுப்பினர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. 

பகடிவதைச் சம்பவங்கள் தொடர்பில் புகாரளிக்க https://tab.bheuu.gov.my/ எனும் அகப்பக்கத்தை மாணவர்களும் பெற்றோரும் நாடலாம். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]