Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2025 எஸ்.டி.பி.எம் தேர்வில்  1,336 மாணவர்கள் 4.0 பி.ஜி.என்.கே பெற்று சிறப்புத் தேர்ச்சி

18/06/2026 05:34 PM

செலாயாங், ஜூன் 18 (பெர்னாமா) -- 2025 எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்களின் ஒட்டுமொத்த அடைவுநிலை முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த ஆண்டில் 2.85-ஆக பதிவாகி இருந்த பி.ஜி.என்.கே எனப்படும் மொத்த சராசரி புள்ளி மதிப்பீடு, இவ்வாண்டு 2.88-ஆக உயர்வு கண்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு, 2025-ஆம் ஆண்டின் எஸ்.டி.பி.எம் தேர்வின் சராசரி புள்ளி மதிப்பீடு, 0.03-ஆக உயர்ந்து 2.88 ஆக பதிவாகியுள்ளது.

அப்போது பதிவான 2.57 பி.ஜி.என்.கே-வுடன் ஒப்பிடுகையில் இது 12.06 விழுக்காடு அதிகம் என மலேசிய தேர்வு மன்றத் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் அமின் முஹமட் தார்ஃப் Datuk Dr Md Amin Md Taff கூறினார். 

"தேர்வு எழுதிய 1,336 அல்லது 3.50 விழுக்காட்டு மாணவர்கள் 4.0 என்ற முழுமையான பி.ஜி.என்.கே  மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70 பேர் இம்முறை அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது," என்றார் அவர்.

பி.ஜி.என்.கே  4.00 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அனைத்து ஐந்து பாடங்களிலும் ‘A’ பெற்று சிறப்புத் தேர்ச்சி கண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 

குறிப்பாக 2024ஆம் ஆண்டில் 53 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டில் 60 ஆக அதிகரித்துள்ளது என்று தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகமான, உப்சி துணை வேந்தருமான அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதனிடையே, கடந்தாண்டு 1,285 பேர் 4A  பெற்றிருந்த நிலையில் இம்முறை அது 1,228 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2024-ஆம் ஆண்டு 41,434 மாணவர்கள் எஸ்.டி.பி.எம் தேர்வு எழுதி இருந்த வேளையில், 2025-இல், அந்த எண்ணிக்கை 38,144-ஆக குறைந்திருந்தாலும், இந்த அடைவுநிலை எட்டப்பட்டுள்ளது வரவேற்புக்குரியதாக உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)